ஆப்பிள் தயாரிப்புகளுக்கான ஆருடங்கள் மற்றும் கணிப்புகளை வெளியிடும் கேஜிஐ நிறுவனத்தின் ஆய்வாளர் மிங்-சி குவா, ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் குறித்து தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், “மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான ஆப்பிள் வாட்ச்சின் முன்பதிவுகள் 2.3 மில்லியனைத் தாண்டியுள்ளன”
“அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1.3 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் வாட்ச்சிற்காக முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அவர்களில் 85 சதவீத பேர் ‘ஸ்போர்ட்’ (Sport) ரகத்திற்கும், 15 சதவீதம் பேர் ‘ஸ்டைன்லெஸ் ஸ்டீல்’ (Stainless Steel) ரகத்திற்கும் முன்பதிவு செய்துள்ளனர். 1 சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்களே விலை உயர்ந்த தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச்சிற்கு முன்பதிவு செய்துள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “ஆப்பிள் வாட்ச்சிற்கான முன்பதிவுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தாலும், அதன் ‘ஒஎல்இடி’ (OLED) திரை மற்றும் ‘ஹப்டிக் அதிர்வியை’ (Haptic Vibrator) உருவாக்குவதில் தாமதம் ஏற்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, 2015-ம் ஆண்டு இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம், 15 முதல் 20 மில்லியன் ஆப்பிள் வாட்ச்களை உருவாக்கும் என தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறியுள்ளன.