பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27 – நேபாளம் சென்றுள்ள மலேசிய மலையேற்றக் குழு பாதுகாப்பாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சனிக்கிழமை அங்கு 7.8 புள்ளி ரிக்டர் அளவில் பதிவான கடும் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் தற்போது வரை 18 பேர் பலியானதாகத் தெரிகிறது.
இந்நிலையில் மலேசிய மலையேற்றக் குழுவிற்கு தலைமையேற்றுள்ள அசிம் அபிஃப் தங்களது நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
கடந்த 23 மணி நேரத்திற்கு முன்பான பதிவில், மலைச் சிகரத்தின் அடித்தள முகாமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதாகவும், இதையடுத்து அங்கு பனிப்புயலும் பனிச்சரிவும் ஏற்பட்டிருப்பதாகவும் 27 வயதான அசிம் தெரிவித்துள்ளார்.
“எங்கு பார்த்தாலும் பனி சூழ்ந்து வெண்மையாகக் காட்சி அளிக்கிறது. கடவுள் அருளால் எங்கள் குழுவினர் பாதுகாப்பாக உள்ளோம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பனிப்பொழிவு தொடர்ந்து நீடித்தாலும் மலைச் சிகரத்தின் அடித்தளத்தில் பாதுகாப்பாக இருக்க முடிகிறது என்று தெரிவித்துள்ள அவர், தங்களது தகவல் தொடர்பு சாதனங்களின் பேட்டரி சக்தி வேகமாக குறைந்து வருவதாக கூறியுள்ளார்.
மலேசிய மலையேற்றுக் குழுவில் 5 மலேசியர்கள், 3 சிங்கப்பூரர்கள் மற்றும் பெல்ஜியம் நாட்டவர் உட்பட ஷெர்பா எனப்படும் மலையேற்ற உதவியாளர்கள் ஆகியோர் உள்ளனர்.