Home உலகம் 82 மணி நேர உயிர்ப் போராட்டம், சிறுநீர் குடித்துப் பிழைத்தேன் – நேபாள இளைஞர் கதறல்!

82 மணி நேர உயிர்ப் போராட்டம், சிறுநீர் குடித்துப் பிழைத்தேன் – நேபாள இளைஞர் கதறல்!

524
0
SHARE
Ad

rescuedகாட்மாண்டு, ஏப்ரல் 30 – நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பலர் இடிபாடுகளுள் சிக்கி இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர்.

இந்நிலையில், 7 மாடிக் கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளை பிரான்ஸ் நாட்டு மீட்பு குழுவினர் அகற்றிக் கொண்டிருந்த போது, இடிபாடுகளுக்கு இடையில் ஒருவரின் முனகல் குரல் கேட்டுள்ளது. பல மணி நேரப் போராட்டத்துக்கு பின்பு அவர் மீட்கப்பட்டார்.

ரிஷிகனால் என்ற அந்த இளைஞர் தான் அனுபவித்த நரக வேதனை குறித்துக் கூறியது, நேபாள பேரிடரின் உண்மை நிலையை பிரதிபலித்தது. தனது உயிர்ப் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், “விடுதி ஒன்றில் 2–வது மாடியில் தங்கியிருந்தேன். திடீரென நில நடுக்கம் ஏற்படும் என்றோ, இடிந்து விழும் கட்டிடத்திற்குள் சிக்கிக் கொள்வேன் என்றோ நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் சில நொடிகளில் நடந்துவிட்டது.”

#TamilSchoolmychoice

“கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடியபோது நாக்கு வறண்டு போனது. உதடுகளில் வெடிப்பு விழுந்தது. நகங்கள் எல்லாம் வெள்ளை நிறமாக மாறிவிட்டன. இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றமும் வீசியது. அதை தாங்கிக் கொள்வதே எனக்கு பெரும் சவாலாக இருந்தது. உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை அறவே போய்விட்டது.”

“நாக்கு வறட்சி அதிகமானதால் உயிர் பிழைக்க சிறுநீரைக் குடித்தேன். 3 நாட்களுக்குப் பிறகு பிரான்ஸ் மீட்பு குழுவினர் என்னை உயிருடன் காப்பாற்றிவிட்டனர்” என்று அவர் கூறியுள்ளார்.