அபுஜா, ஏப்ரல் 30 – நைஜீரிய ராணுவம், போகோ ஹரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், 200 பெண் குழந்தைகளையும், 93 பெண்களையும், சாம்பிசா காட்டிலிருந்து மீட்டுள்ளது.
போகோ ஹரம் தீவிரவாதிகள் மக்களை கடத்துவது, வங்கிகளை கொள்ளையடிப்பது என நைஜீரியாவில் பெரும் அட்டூழியங்களை செய்து வருகின்றனர். இவர்கள் இதுவரையிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றிருப்பதாகவும், 15 லட்சம் மக்களை கட்டாயப்படுத்தி வீடுகளிலிருந்து அழைத்து சென்றிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர்.
கடந்த, 2014 ஏப்ரலில் சிக்போக்கிலிருந்து 200 பெண் குழந்தைகளை போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். இந்நிலையில், பயங்கரவாதிகளை தொடர்ந்து ஒடுக்கி வரும் நைஜீரிய ராணுவம், சமீபத்தில் சாம்பிசா காடுகளிலிருந்து 200 பெண் குழந்தைகளையும், 93 பெண்களையும் மீட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் இவர்கள் 2014 சிக்போக் கடத்தலின்போது கடத்தப்பட்டவர்கள் அல்ல என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.