Home உலகம் சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் – மன்னர் சல்மான் அதிரடி!

சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர் நியமனம் – மன்னர் சல்மான் அதிரடி!

628
0
SHARE
Ad

590937409549ரியாத், ஏப்ரல் 30 – சவுதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசரை நியமித்து மன்னர் சல்மான் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரபு நாடான சவுதி அரேபியாவில், 10 ஆண்டு காலம் பதவியில் இருந்து வந்த மன்னர் அப்துல்லா, தனது 90 வயதில் உடல் நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் 23–ஆம் தேதி மரணம் அடைந்தார்.

அதைத் தொடர்ந்து புதிய மன்னராக சல்மான் பின் அப்துல் அஜீஸ் (வயது 79), முடி சூட்டப்பட்டார். நேற்று அவர் தனது அமைச்சர் அவையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்களை செய்தார்.

#TamilSchoolmychoice

அதில் மிக முக்கிய மாற்றம், பட்டத்து இளவரசராக இருந்து வந்த முக்ரின் பின் அப்துல் அஜீஸ் நீக்கப்பட்டுள்ளார். புதிய பட்டத்து இளவராக உள்துறை அமைச்சராக திகழ்ந்து வந்த முகமது பின் நயீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் மன்னர் சல்மானின் சகோதரர் மகன் ஆவார். மன்னர் சல்மான் தனது மகன் முகமது பின் சல்மானை, துணை பட்டத்து இளவரசராக நியமித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நீண்ட காலம் செயல்பட்டு வந்த இளவரசர் சவுத் அல் பைசல் மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக அமெரிக்காவுக்கான சவுதி தூதர் அடெல் அல் ஜூபெயிர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரச குடும்பத்தை சேராதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பட்டத்து இளவரசர் முகமது பின் நயீப், அமெரிக்காவுடன் நெருங்கிய உறவைப் பராமரித்து வந்தார். எனவே அவரது நியமனத்தை அமெரிக்கா வரவேற்கும் என தகவல்கள் கூறுகின்றன.

துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள முகமது பில் சல்மான், கடந்த ஜனவரி மாதம் முதல் ராணுவ அமைச்சராக செயல்பட்டு வந்தார்.

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ நடவடிக்கைகள், அவரது மேற்பார்வையில்தான் நடைபெற்று பெரும் வெற்றி கண்டன.

தனது பிராந்தியத்தில் போட்டி நாடாக திகழ்கிற ஈரானை பின்னுக்கு தள்ளும் வகையில் சவுதி மன்னர் சல்மான், வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் உறுதியான நிலையை பின்பற்றி வருவதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

சவுதியில் புதிய பட்டத்து இளவரசர், பட்டத்து துணை இளவரசர், புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் நியமனங்களை செய்த மன்னர் சல்மான், பாதுகாப்பு துறையின் அனைத்து ஊழியர்களுக்கும், படையினருக்கும் ஒரு மாத சம்பளத்தை அதிகமாக வழங்கும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சவுதி கூட்டுப்படைகள் வான்தாக்குதல்கள் நடத்தி, கிளர்ச்சியாளர்களால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தல்களை அகற்றி வெற்றி கண்டன.

அதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் பாதுகாப்பு படையினருக்கும், ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளத்தை போனசாக வழங்கும்படி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் அவர் மன்னராக முடி சூட்டப்பட்டபோது, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் 2 மாதம் கூடுதல் சம்பளத்தை வழங்கும்படி ஆணையிட்டார். பென்ஷன்தாரர்களுக்கும் இந்த சலுகையை அவர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.