Home தொழில் நுட்பம் டாட்டூக்களால் ஆப்பிள் வாட்ச் பாதிப்பு – ஆப்பிள் ஒப்புதல்!

டாட்டூக்களால் ஆப்பிள் வாட்ச் பாதிப்பு – ஆப்பிள் ஒப்புதல்!

657
0
SHARE
Ad

apple-watchகோலாலம்பூர், மே 4 –  கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி, உலகம் முழுவதும் வெளியான ஆப்பிள் வாட்ச், பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த கட்ட முன்பதிவுகளும் எதிர்பார்த்ததை விட அதிகரித்துக் கொண்டே இருப்பதாக அந்நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஆப்பிள் வாட்ச்சின் இதயத் துடிப்பை அளவிடும் உணரிகள் (‘சென்சார்’ -Sensor), டாட்டூக்களால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச்சில் இருக்கும் பல்வேறு முக்கிய அம்சங்களில், பயனர்களின் இதயத் துடிப்பை அளவீடு செய்யும் சென்சார் வசதியும் ஒன்று. இந்த வசதி, பயனர்கள் கைகளில் டாட்டூக்களோ அல்லது பச்சையோ குத்தப்பட்டிருந்தால், தவறான இதயத் துடிப்பைக் காட்டுவதாக பல பயனர்கள் தெரிவித்தனர். இதனை ஆப்பிள் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“பயனர்களின் தோலில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தால், அவை இதயத் துடிப்பை அளக்கும் சென்சாரில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவை துடிப்பை அளப்பதற்காக சென்சார் வெளியிடும் ஒளியினில் மாற்றத்தை ஏற்படுத்துவதால், துல்லியமான இதயத் துடிப்பினை அளக்க முடியாமல் போய்விடுகிறது” என்று தெரிவித்துள்ளது.

எனினும், சென்சாரின் இத்தகைய மாறுபாட்டிற்கு டாட்டூக்கள் மட்டும் காரணமல்ல என்றும் கூறப்படுகிறது. தோல் வெப்பமாதல் மற்றும் கைகளின் ஒழுங்கற்ற இயக்கங்களும் ஆப்பிள் வாட்ச்சை பாதிப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.