மும்பை, மே 5 – பாலிவுட் நடிகர் சல்மான்கான், மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிக்கப்பட உள்ளது. அவரை நம்பி ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள பாலிவுட் திரைப்பட உலகத்தினர் இந்த தீர்ப்பை எதிர்பார்த்துள்ளனர்.
மும்பை பாந்த்ராவில் கடந்த 2002-ஆம் ஆண்டு சல்மான் கானின் கார் மோதியதில் சாலையில் உறங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர். இது குறித்து மும்பை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த சல்மான் கான்,
சம்பவம் நடந்தபோது ஓட்டுநர் இருக்கையில் இருந்தது நான் இல்லை என்றும், தன்னுடைய ஓட்டுநர் அசோக் சிங்தான் காரை ஓட்டினார் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,வழக்கில் சல்மானுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டால் அவரை நம்பி ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள பாலிவுட் திரையுலகத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமான சல்மான் கான் நடித்து வரும் ‘பஜ்ரங் பைஜான்’, ‘பிரேம் ரதன் தன் பாயோ’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
மேலும், ‘தபாங்-3’, ‘என்ட்ரி மே நோ என்ட்ரி’ ஆகிய படங்களில் சல்மான் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சல்மானுக்கு தண்டனை வழங்கப்பட்டால் இந்த படங்கள் முடங்கும் அபாயம் உள்ளது.
இதனால் தயாரிப்பாளர்கள் உட்பட படக்குழுவினர் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து வர்த்தக ஆலோசகர்கள் கூறுகையில், ‘சல்மான் வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றே பாலிவுட் திரையுலகம் எதிர்பார்க்கிறது.
அல்லது குறைந்தபட்ச தண்டனை மட்டுமே அவருக்கு விதிக்கப்படலாம்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர். இந்த விபத்து திட்டமிட்ட கொலை அல்ல என்றாலும், மரணம் விளைவிக்கும் குற்றம் என்பதால், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சல்மானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.