புதுடெல்லி, மே 7 – இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸின் 49 சதவீத பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் விருப்பம் தெரிவித்து இருந்தது. எனினும், இண்டிகோ இந்த வர்த்தகம் தொடர்பாக உடனடியான முடிவுகள் ஏதும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ளது.
இண்டிகோ உடனான வர்த்தகம் குறித்து கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாக அதிகாரி அக்பர் அல் பேகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-
“இண்டிகோ நிறுவனத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையை நாங்கள் இன்னும் தொடங்கவில்லை. எனினும், அந்நிறுவனத்தின் தலைவருடன் எங்களுக்கு நல்ல நட்பு உள்ளது.”
“அவர், இண்டிகோவின் பங்குகளை விற்பனை செய்வது குறித்து இதுவரை சிந்திக்கவில்லை என்று கூறியிருக்கிறார். ஒருவேளை அப்படி ஒரு திட்டம் முடிவானால், அதனை ஏற்க கத்தார் ஏர்வேஸ் தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ஏர்பஸ் நிறுவனம் தனது ‘ஏ380 சூப்பர்ஜம்போ‘ (A380 superjumbo) விமானங்களுக்கு ‘ஏ380 நியோ‘ (A380neo) எஞ்சின்களை வாங்க இருப்பது குறித்துக் கூறுகையில், “இத்தகைய விமானங்களை 10-15 சதவீதம் கூடுதலான எரிபொருள் செயல்திறன் மிக்கதாக மேம்படுத்தினால் தான், அந்நிறுவனம் எதிர்பார்க்கும் விற்பனை இலக்கை அடைய முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.