Home நாடு அரசியல் பார்வை: ரொம்பின் சரிவு – நஜிப் தலைமைத்துவத்திற்கு பேரிடியா? பெர்மாத்தாங் பாவ் முடிவிலும் பிரதிபலிக்குமா?

அரசியல் பார்வை: ரொம்பின் சரிவு – நஜிப் தலைமைத்துவத்திற்கு பேரிடியா? பெர்மாத்தாங் பாவ் முடிவிலும் பிரதிபலிக்குமா?

748
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 7 – ரொம்பின், பெர்மாத்தாங் பாவ் – இரண்டு இடைத்தேர்தல்களும் இன்றைய நாட்டின் அரசியல் நடப்பையோ, மக்களின் மனநிலையையோ சுட்டிக் காட்டப் போவதில்லை –

காரணம், இரண்டுமே வித்தியாசமான சூழ்நிலையில் – அனுதாபத்தின் அடிப்படையில் – நடைபெறுகின்றன என்பதுதான் இதுவரை பொதுவான  அரசியல் பார்வையாக இருந்து வந்தது.

அந்த வகையில் மே 5 ஆம் தேதி நடந்து முடிந்த ரொம்பின் இடைத் தேர்தலில் – ஹெலிகாப்டர் விபத்தில் காலமான ஜமாலுடின் ஜார்ஜிசின் அகால மரணத்தால் வீசிய அனுதாப அலையால் – தேசிய முன்னணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

Calon-BN.Tampin.M-599x360

கூடுதலாக அம்னோ-தேசிய முன்னணி வேட்பாளரான ஹாசான் அரிஃபின் மண்ணின் மைந்தர் – முன்னாள் துணை மந்திரி பெசார் – ரொம்பின் அம்னோ தொகுதியின் துணைத் தலைவர் – என்ற அம்சங்கள் ஒருபுறம்,

பிரதமர் நஜிப்பின் சொந்த மாநிலத்தில் நடைபெறும் இடைத் தேர்தல் – அரசாங்கத்திடம் இருந்து ஏராளமாக உதவிகள் பெறும் பெல்டா நிலத் திட்டங்கள் 14ஐ உள்ளடக்கிய தொகுதி – இப்படியாக வேறு சில சாதகமான அம்சங்களும் சேர்ந்து கொள்ள –

ரொம்பின் தொகுதி நஜிப்பின் செல்வாக்கை நிரூபிக்கப் போகின்றது –

அதுவும் பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெறுவதால் இந்த வெற்றியை வைத்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் வெற்றி வாய்ப்பைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற கனவுகளோடு அம்னோவும் தேசிய முன்னணியும் காத்திருந்தன.

அதற்காகத்தான், முதலில் காலியானது பெர்மாத்தாங் பாவ் தொகுதி என்றாலும் ரொம்பின் தொகுதிக்கான இடைத் தேர்தல் முதலில் நடத்தப்பட்டது.

ஆனால், நடந்ததோ நேர்மாறான அதிர்ச்சி தரும் வாக்குகள் சரிவு!

வாக்குகள் சரிவு ஏன்?

கடுமையான – நெருக்கடியான பொதுத் தேர்தலாகக் கருதப்பட்ட 2013 பொதுத் தேர்தலில் 15,000க்கும் மேற்பட்ட வாக்குகளில் ஜமாலுடின் ஜார்ஜிஸ் வெற்றி பெற்றார். ஆனால், அவரது மறைவால் நடைபெற்ற இடைத் தேர்தலில் அவர் மீதான அனுதாபத்தின் நிழல் கொஞ்சமும் விழாத வண்ணம் – தேசிய முன்னணிக்கு கிடைத்த வாக்குகள் பாதியாகக் குறைந்துள்ளது.

Najib-Malaysia-Flag

இது, நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக பெருகி வரும் கண்டனங்களின் பிரதிபலிப்பாகவும் – அவரது செல்வாக்கு மோசமாக சரிந்து வருகின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளது.

ஒரு பக்கம் ஜிஎஸ்டி எனப்படும் பொருள்சேவை வரிகளுக்கான எதிர்ப்புகள் – இன்னொரு பக்கம், மகாதீரின் தொடர் தாக்குதல்கள் –

நஜிப், ரோஸ்மாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய பத்திரிக்கை செய்திகள் – அல்தான்துன்யா கொலைவழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் சைருலின் எதிர்மறையான கருத்துகள் –

1எம்டிபி நிதிப் பிரச்சனைகளினால் நேரடியாக நஜிப்பை நோக்கிப் பாயும் கேள்விக் கணைகள் –

இப்படியாக எல்லா கோணங்களிலும் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிரான பிரதிபலிப்பாகவே ரொம்பின் தொகுதியில் சரிந்துள்ள வாக்குகளின் எண்ணிக்கை எடுத்துக் காட்டுகின்றது.

பாஸ் வேட்பாளரின் தனித்த போராட்டம் 

இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ரொம்பினில் முதன் முறையாகப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நஸ்ரி அகமட் ஒரு புதுமுகம் என்பதோடு, முழுக்க முழுக்க தான் சார்ந்துள்ள பாஸ் கட்சியின் பலத்தையும், தேசிய முன்னணிக்கு எதிரான வாக்குகளை மட்டும் ஆதரவு பலமாகவும் கொண்டுதான் போட்டியில் இறங்கியிருந்தார்.

பக்காத்தான் ராயாட் கூட்டணிக் கட்சியான பிகேஆர் முழுக்க முழுக்க பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மையம் கொண்டிருக்க – ஹூடுட் பிரச்சனையால் பாஸ் கட்சிக்கு ஆதரவாக களமிறங்காமல் ஜசெக ஒதுங்கி நின்றதோடு, தனது கவனத்தையும் முழுக்க முழுக்க பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் அந்தக் கட்சி பதித்திருந்தது.

ரொம்பினில் ஹூடுட் பிரச்சனையால் சீன வாக்குகள் – அவை சுமார் 1,300 என்ற அளவில் சொற்பமாக இருந்தாலும் – பாஸ் கட்சிக்கு அதிகமாகக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

மசீச வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி சீன வாக்குகள் கடந்த பொதுத் தேர்தலை விட இந்த முறை கூடுதலாகவே தேசிய முன்னணிக்குக் கிடைத்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் தனித்தே போட்டியிட்டு பாஸ் கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் குவித்திருக்கின்றது என்பதையும் – தேசிய முன்னணியின் கோட்டைக்குள் ஊடுருவி அதன் ஆதரவு பலத்தை சரிய வைத்துள்ளது என்பதையும் வைத்துப் பார்த்தால் –

பக்காத்தான் ராயாட் கூட்டணி முழு மூச்சுடன் – முழு வீச்சுடன் – இங்கே இறங்கியிருந்தால் தேசிய முன்னணிக்கு மேலும் பலத்த அடி விழுந்திருக்கும் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

ரொம்பின் வாக்குகள் சரிவு ஏன் என்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் என பிரதமர் நஜிப்பும் அறிவித்துள்ளார்.

அந்த ஆய்வில் அவரது தலைமைத்துவமும் சுயபரிசோதனை செய்யப்படுமா என்பது தெரியவில்லை!

பெர்மாத்தாங் பாவ் – மிகப் பெரும்பான்மையில் வான் அசிசா வெற்றியா?

ரொம்பின் வாக்குகள் சரிவால், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பிகேஆர் கட்சிக்கும், வான் அசிசாவுக்கும் புதிய எழுச்சியும் – உற்சாகமும் கிடைத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

13478_582125415224072_4279986512981054437_n

இன்று நடைபெறும் பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வான் அசிசா கடந்த பொதுத் தேர்தலை விட கூடுதலானப் பெரும்பான்மையில் வெற்றி வாகை சூடுவார் –

அன்வார் இப்ராகிம் மீதான அனுதாப அலை அதற்கு உதவும் – நஜிப் மீதான எதிர்ப்புகளும் அதற்கு உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளை முதல் – இரண்டு இடைத் தேர்தல்களின் முடிவுகளின் காரணமாக –

நஜிப்பிற்கு எதிரான அம்னோ தலைமைத்துவப் போராட்டமும் – அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல்களும் மேலும் தீவிரமடையும் என்றும் எதிர்பார்க்கலாம்

-இரா.முத்தரசன்