Home இந்தியா நாளை தீர்ப்பு, பதைபதைக்கும் ஜெயலலிதா – பரபரப்பில் தமிழக அரசியல்!

நாளை தீர்ப்பு, பதைபதைக்கும் ஜெயலலிதா – பரபரப்பில் தமிழக அரசியல்!

541
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, மே 10 – ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை வெளியாக உள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது மாறப்போகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதன் காரணமாகத் தான் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலே, இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளது.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கிக் குவித்ததாக அவர் மீது ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக சசிகலா, சுதாகரன் மற்றும் உறவினர் இளவரசி ஆகியோரும் செயல்பட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.

சுமார் 18 ஆண்டுகாலம் நடைபெற்ற இந்த வழக்கிற்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதன்படி ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகே, ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்தது.

#TamilSchoolmychoice

சிறப்பு நீதிமன்றதின் தீர்ப்பிற்கு எதிராக ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க  நீதிபதியாக குமாரசாமியை நியமித்தது. சுமார் 45 நாட்களில் வழக்கை விசாரித்து முடித்த நீதிபதி, ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அரசு வழ‌க்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தீர்ப்புத் தேதி தள்ளிப்போனது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், பவானி சிங் நியமனம் செல்லாது என அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு, ஆச்சாரியாவை அரசு வழ‌க்கறிஞராக நியமனம் செய்தது. அவர் தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமாரசாமி, தீர்ப்பு தொடர்பான திருத்தங்களுக்கு அவகாசம் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதி மாலை, ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு 11-ம் தேதி (நாளை) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பு தொடர்பாக பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், கீழ் நீதிமன்றம் விதித்த தீர்ப்பை, உயர்நீதிமன்றம் உறுதி செய்யலாம் அல்லது அபராதமும், சிறை தண்டனையும் அதிகம் என உயர்நீதிமன்றம் கருதினால், அதனை குறைப்பதற்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், பொது ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் விடுதலை ஆவதற்கும் வாய்ப்புகள் இருப்பதை சட்ட வல்லுனர்கள் மறுக்கவில்லை. எவ்வாறாயினும், நாளைய தீர்ப்பு, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவது உறுதி.