கோலாலம்பூர், மே 10 – ஆயிரம்தான் அரசியலாக இருந்தாலும் தந்தை-மகன் ரத்தபாசம் மாறாது என்பதை நிரூபிப்பதுபோல், நஜிப்புக்கு எதிராகத் தன் தந்தை துன் மகாதீர் தொடங்கியிருக்கும் போராட்டத்தில் தந்தையோடு கைகோர்த்திருக்கின்றார் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர்.
1 எம்டிபி குறித்து நஜிப்புக்கு எதிராக நாடு முழுமையிலும், குறிப்பாக அம்னோவிலேயே வலுத்துவரும் எதிர்ப்புக் குரல்களுக்கிடையில் தனது குரலையும் துணிச்சலுடன் பதிவு செய்திருக்கின்றார் முக்ரிஸ்.
“தபோங் ஹாஜி எனப்படும் மெக்கா புனிதப் பயணத்திற்கான சேமிப்பு நிதி வாரியம்1எம்டிபி நிறுவனத்திடம் இருந்து குறிப்பிட்ட நிலத்தை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்க தயாராக உள்ளது எனில், அதற்கும் முன்பாக 1எம்டிபி நிறுவனத்திற்கு அதே நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு விற்றதற்கு நிதியமைச்சு என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?” என முக்ரிஸ் மகாதீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1எம்டிபியிடம் இருந்து குறிப்பிட்ட நிலத்தை உத்தேச சந்தை விலையை விட 3 விழுக்காடு குறைந்த விலைக்கு வாங்கப் போவதாக தபோங் ஹாஜி கடந்த வியாழக்கிழமை அறிவித்தது. நிலத்தின் விலை 194 மில்லியன் ரிங்கிட் என்பதால், அதை வாங்கும் முடிவு சரியான நடவடிக்கையே என அந்த நிதி வாரியம் விளக்கமும் அளித்திருந்தது.
இதையடுத்து இந்த நில விற்பனை விவகாரம் தொடர்பாக அம்னோ தலைவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.
ஷாபி அப்டால்லும் கேள்வி
இந்த நில விவகாரம் தமக்கு மட்டுமல்லாது பொது மக்களுக்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது என அம்னோ உதவித் தலைவரான டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் (படம்) வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“இந்த விஷயத்தை கவனமாக கையாள வேண்டும். அப்போதுதான் இந்த முதலீடு தொடர்பில் தபோங் ஹாஜி பங்குதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்,” என அப்டால் கூறியிருந்தார்.
இப்படியாக அம்னோவின் ஒவ்வொரு தலைவரும் 1எம்டிபி குறித்தும், தாபோங் ஹாஜி நிலம் வாங்கியது தொடர்பிலும் கேள்விகள் தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெர்மாத்தாங் பாங் இடைத்தேர்தல் தோல்விக்கு 1எம்டிபி விவகாரம்தான் முக்கியக் காரணம் என துணைப் பிரதமர டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் சாடியுள்ளார்.
இதேபோல், இந்த நில விற்பனை விவகாரம் தொடர்பாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடினும் தனது கவலையைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.