Home அவசியம் படிக்க வேண்டியவை எம்எச்370 தேடுதல் வேட்டை: 19-ம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டெடுப்பு!

எம்எச்370 தேடுதல் வேட்டை: 19-ம் நூற்றாண்டு கப்பலின் பாகம் கண்டெடுப்பு!

691
0
SHARE
Ad

கான்பெர்ரா, மே 14 – மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில், மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள், அதை தேடும் பணியை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

 

MH 370அவ்வப்போது “இதோ நெருங்கிவிட்டோம்”, “கடலுக்கு அடியில் இருந்து சமிக்ஞைகள் வருகின்றன” என்றெல்லாம் திடீர், திடீர் என அறிக்கைகளை விடுவதும், பின்னர் அது வேறு ஏதாவது பொருட்கள் என அறிவிப்பதும் தேடுதல் குழுவினருக்கு வாடிக்கையாகிவிட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது தேடுதல் படையினர் புதிதாக ஒரு ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளனர் . அதாவது தெற்கு இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடுகையில், கடலுக்கு அடியில் 12,795 அடி ஆழத்தில், பழமை வாய்ந்த சரக்கு கப்பலின் பாகம் ஒன்றைக் கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

அண்மையில் மேற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதி அருகே உள்ள தெற்கு இந்திய பெருங்கடலில் 60 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியில் விமானத்தை தேடி வரும் தேடுதல் படையினர், சோனார் கருவி மூலம் கடலுக்கு அடியில் சில பொருட்கள் கிடப்பதை கண்டறிந்தனர்.

பின்னர் தான் தெரிந்தது, சோனார் கருவி கண்டுபிடித்துள்ள அந்த பொருட்கள் மாயமான மலேசிய விமானத்தினுடையது அல்ல என்றும், மாறாக அந்த பொருள் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சரக்கு கப்பலின் பாகமாக இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இருப்பினும் தேடல் பணியில் பயன்படுத்தப்படும் கருவிகள் சிறப்பாக செயல்படுவதை நினைத்து தாங்கள் மகிழ்வதாகவும், விரைவில் விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் எம்எச்370 தேடுதல் பணியின் இயக்குநர் பீட்டர் ஃபோலே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பேருடன் கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்370 நடுவானில் மாயமானது.

இன்று வரை அனைத்துலக அளவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் விமானத்தின் பாகம் என ஒரு சிறிய ஆதாரம் கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.