ஜியான், மே 15 – இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனைக்கு விரைவில் சுமுகமான தீர்வு காணப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
மேலும் தீவிரவாதிகள் தொடர்பாக இரு நாடுகளும் தகவல்களை பரிமாறக்கொள்ள வேண்டும் என்று இரு தலைவர்கள் சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டது.
மூன்று நாள் பயணமாக சீனா சென்றுள்ள மோடி, சீன அதிபரை நேற்று அவருடைய சொந்த ஊரான ஜியானில் சந்தித்துப் பேசினார்.கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் மூன்றாவது முறையாக சந்திக்கின்றனர்.
பிரதமராக சீனாவுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ள மோடி, இரு தரப்பு உறவை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த பேச்சுவார்த்தை குறித்து மத்திய வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கூறியதாவது: “பலதரப்பட்ட பிரச்சனைகள், விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்”.
“மிகவும் சுமுகமாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இரு தரப்பு நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்”.
“இரு நாடுகளுக்கும் இடையே உள்ள மிக முக்கியப் பிரச்சனையான எல்லைப் பிரச்சனைக்கு சுமுகமாக தீர்வு காணப்பட வேண்டும். அதுவும் விரைந்து காணப்பட வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்”.
“அருணாசலப் பிரதேசத்தில் சுமார் 2000 கி.மீ. பரப்பளவு நிலப் பிரச்சனை உள்ளதாக சீனா கூறுகிறது. ஆனால் சுமார் 4000 கி.மீ. பரப்பளவுக்கு எல்லைப் பிரச்சனை உள்ளது”.
“இதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலை சிறப்பு பிரதிநிதிகள் குழு இடையே இதுவரை 18 சுற்று பேச்சுக்கள் நடந்துள்ளது. எல்லை பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று மோடி தீவிரமாக வலியுறுத்தினார்” என வெளியுறவுத் துறைச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கூறினார்.