கோலாலம்பூர், மே 18 – ‘கூகுள் மேப்’ (Google Map) பயன்பாட்டிற்கு இணையாக தனது ‘ஆப்பிள் மேப்’ (Apple Map) சேவையை மெருகேற்ற ஆப்பிள் நிறுவனம், ‘ஜிபிஎஸ்’ (GPS) சேவையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் ‘கோஹரன்ட் நேவிகேஷன்’ (Coherent Navigation) எனும் நிறுவனத்தை வாங்கி உள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் மேப் சேவை, கூகுள் மேப்பிற்கு கடும் போட்டி அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல், அதில் ஆப்பிளின் ‘சிறி’ (Siri) தொழில்நுட்பமும் மேம்படுத்தப்பட்டு இருந்தது. ஐபோன், ஐபேட் உட்பட ஆப்பிள் கருவிகளில் சிறப்பு அம்சமாக ஆப்பிள் மேப் இருந்தாலும், இடங்களின் குறிப்புகள் மற்றும் வரைபடங்களில் கூகுளுக்கு ஈடாக செயல்பட முடியவில்லை.
இந்நிலையில், ஜிபிஎஸ் சேவையில் துல்லியத்தை மேம்படுத்த இந்த கோஹரன்ட் நேவிகேஷன் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. இது பற்றி ஆப்பிள் நிறுவனம் எவ்வித தகவல்களையும் வெளியிட வில்லை என்றாலும், கோஹரன்ட் நேவிகேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பால் லெகோ, தங்கள் நிறுவனம், ஆப்பிள் மேப் சேவையுடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.