கோலதிரெங்கானு, மே 18 – ‘எஃப் ஏ’ கிண்ண அரை இறுதிப் போட்டியின் முடிவில் கலவரத்தில் ஈடுபட்ட திரெங்கானு கால்பந்து ரசிகர்கள் 25 பேர் காவல்துறையால் தடுத்து
வைக்கப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு கோலதிரெங்கானுவில் எஃப் ஏ கிண்ண அரை இறுதிப் போட்டி
நடைபெற்றது. இதில் சிங்கப்பூரின் லயன்ஸ் XII மற்றும் திரெங்கானு அணிகள்
மோதின.
இந்தப் போட்டியின் 89ஆவது நிமிடத்தில் திரெங்கானு வீரர் அடித்த நான்காவது
கோல் செல்லாது என கள நடுவர் அறிவித்தார். இச்சமயம் திரெங்கானு 3-2 என்ற
புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
ஒருவேளை இந்த கோல் அனுமதிக்கப்பட்டிருந்தால் திரெங்கானு இறுதிப்
போட்டிக்கு தேர்வாகியிருக்கும். ஆனால் நடுவரின் முடிவால் திரெங்கானுவுக்கு
அந்த வாய்ப்பு பறிபோனது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த அணியின் ரசிகர்கள் போட்டி நடைபெற்ற திடலுக்கு
வெளியே கலவரத்தில் ஈடுபட்டனர். இச்சமயம் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று
எரிக்கப்பட்டது. மேலும் சில பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.
இதையடுத்து 16 முதல் 36 வயதுக்குட்பட்ட 23 ரசிகர்கள் 4 நாட்களும், மேலும்
2 ரசிகர்கள் போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பிலும் தடுக்கு
வைக்கப்பட்டுள்ளனர் என்று கோலதிரெங்கானு காவல்துறை தலைவர் ஏ.சி.பி.,
இட்ரிஸ் ரஃபர் தெரிவித்தார்.
கலவரத்தை அடுத்து கூட்டரசு ரிசர்வ் படையினர் வரவழைக்கப்பட்டு நிலைமை
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார். கலவரத்தில் காவல்துறையைச்
சேர்ந்த 4 பேர் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே நடுவரின் தீர்ப்புக்கு திரெங்கானு அணியின் பயிற்சியாளரும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.