திருவனந்தபுரம், மே 22 – பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியை தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத் தலைவராக நியமிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மலையாள நடிகரான சுரேஷ் கோபி சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தீவிரமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
கடந்த வருடம் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு குஜராத் முதல்வராக இருந்தபோது மோடியை சுரேஷ் கோபி அகமதாபாத் சென்று சந்தித்து பேசினார்.
அப்போதே, தான் பிரதமராக வந்தால் மத்தியில் முக்கிய பதவி தருவதாக சுரேஷ் கோபியிடம் மோடி உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் சுரேஷ் கோபிக்கு தேசிய திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் பதவியை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
நேற்று முன்தினம் இவர் டெல்லி சென்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, செய்தி ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோட் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது, திரைப்பட மேம்பாட்டு கழக தலைவர் பதவிக்கு சுரேஷ் கோபியை தேர்வு செய்த விவரத்தை இருவரும் உறுதிபடுத்தினர். ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சுரேஷ் கோபி துபாய் சென்றுள்ளார். 24-ஆம் தேதி அவர் துபாயிலிருந்து திரும்புகிறார்.
அதன்பிறகு சுரேஷ் கோபி புதிய பொறுப்பை ஏற்பார் என கூறப்படுகிறது. இப்பதவி மத்திய இணையமைச்சருக்கு சமமான பதவியாகும்.
தற்போது இந்த பதவியில் பிரபல இந்தி சினிமா தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி உள்ளார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார்.
1975-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. தேசிய திரைப்பட விழாக்களை நடத்துவது, வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுக்கு கொண்டு வருவது,
இந்திய படங்களை வெளிநாட்டுக்கு அனுப்புவது உட்பட சினிமா தொடர்பான பல்வேறு பணிகளை தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் செய்து வருகிறது.
சுரேஷ் கோபி இப்பதவிக்கு வரும் முதல் மலையாள நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.