கோப்பெங், மே 24 – தனது பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிப் இருப்பதாக அரசியல் ஆரூடங்கள் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், “தனி ஒரு மனிதரின் கோரிக்கைக்காக தான் பதவி விலகப் போவதில்லை – தம்மை பதவி விலகச் சொல்ல இது சரியான தருணமும் அல்ல ” என்று பிரதமர் நஜிப் பதிலடியாக சூளுரைத்துள்ளார்.
நேற்று கோப்பெங்கில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“இது நமக்குள் மோதிக் கொள்வதற்கான நேரமல்ல. என்னைப் பதவியில் இருந்து விலகுமாறு சொல்வதற்கும் உகந்த தருணமும் இது அல்ல. மாறாக சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டிய நேரம் இது” என்றார் நஜிப்.
இந்த நிகழ்வின்போது தமக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தம்மை நெகிழச் செய்ததாக குறிப்பிட்ட அவர், இத்தகைய கனிவான ஆதரவே தற்போது தனக்குத் தேவை என்றார்.
“எந்த நிர்வாகத்திலும் சில வலுவற்ற அம்சங்கள் இருக்கவே செய்யும். நாம் அனைவரும் மனிதர்களே… எனவேதான் மக்களுக்கு சேவையாற்றவும், நமது போராட்டங்களை தொடரவும் வாய்ப்பு கேட்கிறேன். நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என உறுதி அளிக்கிறேன். இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளன. நாம் பிளவுபடாமல் இருந்தால் அடுத்த பொதுத் தேர்தலிலும் கடவுள் நமக்கு மீண்டும் வெற்றியைத் தருவார்,” என்று நஜிப் மேலும் தெரிவித்தார்.