இஸ்லாமாபாத், மே 25 – “பயங்கரவாதத்தை பயங்கரவாத செயல்களால் தான் அழிக்க வேண்டும்” என்று இந்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியுள்ளதற்கு பாகிஸ்தான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரின் இந்த பேச்சின் மூலம், பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவது இந்தியா தான் என தெளிவாகிறது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர், கடந்த சில நாட்களுக்கு முன், சியாச்சின் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, ‘இந்தியாவில் மீண்டும் ஒரு மும்பை தாக்குதல் நடந்தால், அதை இந்தியா சமாளிக்குமா? என பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு அமைச்சர் பாரிக்கர் பதில் கூறியதாவது:-
“இந்தியாவில் இனி அது போன்ற தாக்குதல்கள் நடைபெறாது. அதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அதனை எடுத்து வருகிறோம். இராணுவத்தினரை வைத்து தான், பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்பதில்லை, முள்ளை முள்ளால் எடுக்கலாம்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ், ‘”பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என, நாங்கள் பலமுறை கூறி வந்தோம். அதை உறுதிபடுத்தும் வகையில், இந்திய இராணுவ அமைச்சர் பாரிக்கர் கருத்து கூறியுள்ளார்.”
“பயங்கரவாதத்தால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்நிலையில், இந்திய அமைச்சர் ஒருவரே, பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் ஒழிப்போம் என கூறியுள்ளது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.