ஜோகூர் பாரு, மே 25 – மலேசியாவிற்கு தனது மனைவியுடன் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் லண்டன் மேயர் (Lord Mayor of London) ஆலன் யரோ, “தான் ஒரு மலேசியன்” என்று மக்கள் முன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஜோகூரிலுள்ள ஜாரோ (Johor Area Rehabilitation Organisation – Jaro) மறுவாழ்வு மையத்தை நேற்று தனது மனைவி கில்லியுடன் பார்வையிட்ட அவர், அங்குள்ள மக்கள் முன் உரையாற்றுகையில், தான் கடந்த 1951-ம் ஆண்டு மலேசியாவில் பிறந்ததாகத் தெரிவித்தார். புக்கிட் செரேனில் தனது குடும்பத்துடன் 6 ஆண்டுகள் வசித்ததாகவும் யரோ குறிப்பிட்டார்.
மேலும், அந்த அமைப்பு தனது தாயார் பௌலா யரோவை நினைவு படுத்துவதாகவும், அவர் அந்த மையத்தில் தன்னார்வலராகப் பணியாற்றியதாகவும் யரோ தெரிவித்தார்.
கடந்த 1952-ம் ஆண்டு காச நோயாளிகளுக்காக உருவாக்கப்பட்ட ஜாரோ அமைப்பானது, பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்காக மாற்றப்பட்டது. தற்போது அந்த மையத்தில் 60 மாற்றுத்திறனாளிகள் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, யரோ அந்த மையத்திற்கு 11,000 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கினார்.