டோக்கியோ, மே 25 – ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியேறினர்.
நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோ நகரில் உள்ள நரிதா அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டு ஓடுதளங்களும் சிறிது நேரம் மூடப்பட்டு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்று சோதிக்கப்பட்டது. பாதிப்பு ஏற்படாததால் ஓடுதளங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளது. அதனால் நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் தான் அங்கு கட்டிடங்கள் கட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.