சீனா, மே 26 – சீனாவில் வெளியாகியிருக்கும் அமீர் கானின் பி.கே. படம் மூன்று நாளில் 35 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பி.கே.
இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் நடித்துள்ளார். படத்தின் இயக்குனர் 3-இடியட்ஸ் புகழ் ராஜ் குமார் ஹிராணி. இந்த ஜோடியின் 3-இடியட்ஸ் படமும் அந்நாட்டில் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இந்நிலையில் கடந்த வெள்ளி அன்று சீனாவில் ‘பி.கே’. படம் வெளியிடப்பட்டது. கடவுள் நம்பிக்கை அற்ற தேசமான சீனாவில் மூட நம்பிக்கைகளை கிண்டல் செய்யும் இந்த படம் எம்மாதிரியான வரவேற்பை பெறும் என்ற குழப்பம் நிலவியது.
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக மூன்றே நாட்களில் ரூ. 35 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இது அந்நாட்டின் வசூலில் இரண்டாவது இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.