சிப்பாங், மே 28 – பணிநீக்கம் செய்யப்படும் மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) பணியாளர்களுக்கு அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரிச்சர்ட் ரியாட் ஜேம் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக மாஸ் நிறுவனப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர்.இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே ரிச்சர்ட் இவ்வாறு கூறினார்.
“நீக்கப்படும் பணியாளர்களின் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கு உதவுவதற்கான வழிமுறையை கண்டறிவோம்.மாஸ் நிறுவனத்தில் மொத்தமுள்ள 20 ஆயிரம் பணியாளர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட இருப்பதாக அறிகிறேன்.”
“இது நிச்சயம் அதிர வைக்கும் எண்ணிக்கைதான். எனினும் அரசாங்கம் அப்பணியாளர்களுக்கு உதவும் என கருதுகிறேன்.பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையை அரசு கவனத்தில் கொள்ளும் என்பது உறுதி,” என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ரிச்சர்ட் தெரிவித்தார்.
மாஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலதிகாரியாக பொறுப்பேற்றுள்ள கிறிஸ்டோஃப் முல்லர் சிறிதளவும் நேரத்தை வீணடிக்காமல் செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், மாஸ் தொழிற்சங்க அமைப்புகளுடன் முல்லர் உடனுக்குடன் பேச்சுவார்த்தை நடத்தியது முக்கிய நடவடிக்கை என்றார்.
“புதிய தலைமைச் செயலதிகாரி ஏற்கெனவே இருமுறை தொழிற்சங்க அமைப்புகளைச் சந்தித்துள்ளார். அவர் இப்போது தான் பொறுப்பேற்றுள்ளார் என்ற போதிலும் இது மிக நல்ல நடவடிக்கை எனக் கருதுகிறேன்,” என்றார் ரிச்சர்ட் ரியாட்.