ஐதராபாத், மே 28 – ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு நேற்று ஒரே நாளில் 151 பலியாயினர். இந்தியா முழுவதும் வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1100-ஐ தாண்டியுள்ளது. நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
அதிலும் குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் காரணமாக வெப்ப நிலை 115 டிகிரியை தாண்டி வருகிறது. இதனால் அங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
உயிரிழப்பு அதிகரித்து வருவது குறித்து இரண்டு மாநில அரசுகளும் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், பகலில் வெயிலில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திரா, தெலங்கானாவில் வெயிலுக்கு 151 பேர் பலியாயினர். வாரங்கல், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 13 மற்றும் நலகொண்டாவில் அதிகபட்சமாக 20 உள்பட தெலங்கானாவில் மட்டும் நேற்று 76 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கு அதிகபட்சமாக 112 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது ஆந்திராவில் ஸ்ரீகாகுளத்தில் 15, விஜயநகரத்தில் 12 உள்பட 75 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு அதிகபட்சமாக 115 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது.
இரண்டு மாநிலங்களிலும் தொடர்ந்து அனல் காற்று வீசி வருகிறது. இன்னும் சில தினங்களுக்கு சுட்டெரிக்கும் வெயில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும் ஆந்திராவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 852 ஆகவும், தெலங்கானாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதே போல் தலைநகர் டெல்லியில் அதிகபட்சமாக வெப்பம் 113 டிகிரி பதிவாகியிருந்தது. மேலும் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய வட மாநிலங்களிலும் நேற்று அதிகபட்சமாக வெப்பம் 115 டிகிரியை எட்டியது.