புது டெல்லி, மே 28 – இந்தியாவின் முன்னாள் பிதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடி நேற்று அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பல்வேறு யூகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது.
சமீபத்தில் 2ஜி ஊழல் வழக்கில், தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால், மன்மோகன் சிங் விதிகளை மீறும் படி என்னை மிரட்டினார் என பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். இந்த வேளையில் மோடி-மன்மோகன் சிங் சந்திப்பு நடந்துள்ளது. அதன் காரணமாகவே அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனினும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்,வெளியுறவுத்துறை கொள்கைகள் பற்றி விவாதிக்கவும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பொது ஊடகத்தில் இதுவரை 2ஜி வழக்கு பற்றி வாய் திறக்காத மன்மோகன் சிங், முதல் முறையாக பிரதீப் பைஜாலின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.