புதுடெல்லி, மே 29 – நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொன்ற வழக்கு தொடர்பாக அரசிடமிருந்த ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகியதாக தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் சட்ட செயற்பாட்டாளர் ஒருவர், சல்மான் கான் தண்டனை பெற்று, பிறகு தண்டனை இடைக்கால ரத்து செய்யப்பட்ட 2002-ல் நடந்த கார் விபத்து வழக்கு தொடர்பாக மகாராஷ்டிர அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் தனது மனுவில், சல்மான் வழக்கில் எவ்வளவு வழக்கறிஞர்கள், சட்ட ஆலோசகர்கள் செயல்பட்டார்கள் மற்றும் எத்தனை அரசு வழக்கறிஞர்கள் வாதாடினார்கள் போன்ற விவரங்களை கேட்டிருந்துள்ளார்.
ஆனால் அவருக்குக் கிடைத்த பதில் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிலில், கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தீயில் கருகி விட்டன என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்த வழக்கில் மும்பை அமர்வு நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஆனால், மே 8-ஆம் தேதி இவருக்கு ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம், தண்டனையையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டது. பின்னர் நடிகர் சல்மான் கான் நீதிமன்ற உத்தரவுடன் தற்போது துபாய் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.