கோலாலம்பூர், ஜூன் 1 – வழக்கு விசாரணை நடத்த, ஆகும் அதிகப்படியான செலவுகளை சமாளிக்க இயலாமல் தான், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு எதிரான வழக்கை மீட்டுக்கொள்வதாக முகமட் சைபுல் புகாரி அஸ்லான் கூறியுள்ளார்.
இது குறித்து இன்று சைபுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கு விசாரணைக்குத் தேவையான செலவுகளை என்னால் ஈடுகட்ட முடியவில்லை. என்னுடைய சொத்துக்களை அடமானம் வைத்து தான் நீதிமன்றத்திற்கு வந்து சென்று கொண்டிருக்கிறேன்.”
“கடந்த 2008-ம் ஆண்டு நான் அளித்த காவல்துறை புகார் உண்மை என்று நிரூபிக்க, கடந்த 7 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலைந்த பிறகு தான் இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூன் மாதம், அன்வாருக்கு எதிராக தான் தாக்கல் செய்த அவதூறு வழக்கை தொடரப்போவதில்லை என்பதையும் சைபுல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலை பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளரான சைபுல், அவருக்கு எதிராகத் தாக்கல் செய்திருந்த 50 மில்லியனுக்கான அவதூறு வழக்கை மீட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அவ்வாறு தான் அவதூறு வழக்கை மீட்டுக் கொண்டதால், அன்வாருக்கு எதிரான தனது ஓரினப் புணர்ச்சி காவல் துறை புகாரை மீட்டுக் கொண்டதாக அர்த்தமாகாது என்றும் சைபுல் வலியுறுத்தி உள்ளார்.
அந்தப் புகாரில், அன்வார் தன்னை ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுத்தினார் எனத் தான் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை இப்போதும் தான் மறுஉறுதிப்படுத்துவதாக சைபுல் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.