வாஷிங்டன், ஜூன் 4 – தனது பயனர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றுக் கொண்டு அதை பாதுகாக்க வழி இல்லாமல் சில நிறுவனங்கள் அவ்வபோது வெளியிட்டு வருகின்றன என்று ஆப்பிள் தலைவர் டிம் குக், கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை மறைமுகமாக கேலி செய்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய டிம் குக், கூகுள் மற்றும் பேஸ்புக் பற்றி சூசகமாக கூறியிருப்பதாவது:-
“நான் சிலிகான் வெளியில் இருந்துதான் உங்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இங்கு ஆப்பிள் அல்லாது பல்வேறு புகழ்பெற்ற நிறுவனங்களும் உள்ளன. அந்த நிறுவனங்கள் புகழ்பெறுவதற்கு மிக முக்கிய காரணம், அந்நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்கும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் தான். பாதுகாப்பு காரணங்களுக்காக என்று கூறி சில நிறுவனங்கள் பயனர்களின் அடிப்படை தகவல்களை பெற்றுக் கொள்கின்றன. பின்னர் அதனை பாதுகாக்க வழியில்லாமல் பொது ஊடகங்களில் வெளியிட்டு பயனர்களை சிக்கலில் மாட்டி விடுகின்றன.”
“ஆனால் ஆப்பிள் அதுபோன்ற எந்த செயல்களிலும் ஈடுபடுவதில்லை. வாடிக்கையாளர்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களையும் நாங்கள் பெறுவதில்லை”என்று அவர் தெரிவித்துள்ளார்.
டிம் குக்கின் இந்த விமர்சனத்திற்கு இதுவரை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் எந்தவொரு பதிலும் தெரிவிக்கவில்லை.