Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: ‘காக்கா முட்டை’ – எளிமையான கதையில் ஆழமான கருத்து!

திரைவிமர்சனம்: ‘காக்கா முட்டை’ – எளிமையான கதையில் ஆழமான கருத்து!

739
0
SHARE
Ad

kakka-muttaiஜூன் 5 – அமெரிக்க பீட்சா, சுட சுட சென்னையின் புறநகர் பகுதிகளில் கூட கிடைக்கும் அளவிற்கு தேசங்களுக்கு இடையிலான தூரம் குறைந்து பொருட்கள் உலகமயமாகிவிட்ட நிலையில், அடிதட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் இன்னும் அப்படியே இருப்பதை எடுத்துக் காட்டும் படமாக காக்கா முட்டை அமைந்துள்ளது.

படம் வெளிவருதற்கு முன்பே உலக அளவில் திரைப்பட விழாக்களில் அதிக அளவில் பாராட்டுகளைப் பெற்று தேசிய விருதுகளை குவித்துள்ள ‘காக்கா முட்டை’ படத்தை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்க, மணிகண்டன் இயக்கியுள்ளார்.

கதை என்ன?

#TamilSchoolmychoice

சென்னையின் புறநகர் பகுதியில் குடிசையில் வாழும் சகோதரர்கள் ரமேஷ், விக்னேஷ் . அப்பா சிறைக்குச் சென்று விட ஏழ்மை நிலையில் அம்மா, பாட்டியுடன் வளர்கிறார்கள்.

அவர்கள் விளையாடும் இடத்தில் திடீரென பிட்சா கடை ஒன்று வந்துவிடுகின்றது. அதை பிரம்மிப்பாகப் பார்க்கும் இருவரும் அந்த கடைக்குச் சென்று பிட்சா சாப்பிட்டு விட வேண்டும் என்று ஆசைப் படுகின்றார்கள்.

அவர்களின் ஆசை நிறைவேறியதா? இருவரும் பிட்சா சாப்பிட்டார்களா என்பதை மிகவும் எளிமையாக, அதே நேரத்தில் சமூக அவலங்களையும், உலகமயமாதலையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

நடிப்பு

d18735a0-5540-41d4-a8d0-fde3a19cb2491பெரிய காக்காமுட்ட, சின்ன காக்காமுட்டயாக ரமேஷும் விக்னேஷும் நடித்திருக்கிறார்கள் என்பதை விட கதையுடன் வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

ஒவ்வொரு காட்சியிலும் இருவரும் முகபாவனைகளாலும், உடல்மொழிகளாலும் அசத்துகிறார்கள். குறிப்பாக கதையில் ஆங்காங்கே ரமேஷின் காமெடிக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

எப்படியாவது பிட்சாவை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காசு தேடி அலையும் காட்சிகள் அடிதட்டு மக்களின் இயலாமையின் எதிரொலி. தெருநாயை பிடித்துக் கொண்டு போய் 25 ஆயிரத்திற்கு விலை பேசுவது, நிலகரியை பொறுக்கி விற்று காசு பார்க்க எண்ணுவது என ‘299 ரூபாய்’ கனவோடு விறுவிறுப்பாக நகர்கிறது கதைக்களம்.

ஐஸ்வர்யாராஜேஷ் மற்றும் பாட்டியின் நடிப்பு அற்புதம். இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக கச்சிதமாகப் பொறுந்துகிறார் ஐஸ்வர்யாராஜேஷ். அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் என ஐஸ்வர்யா தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதைகள் அவரை தேசிய விருதுப் படம் வரை கொண்டு சேர்த்திருக்கிறது.

இவர்களைத் தவிர முக்கியக் கதாப்பாத்திரத்தில் ரமேஷ் திலக் நடித்திருக்கின்றார். ரமேஷ் திலக், யோகி பாபு இருவரின் காமெடிக் காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.

ரசித்தவை

இறுதிவரை பெரிய காக்கா முட்டையும், சின்ன காக்கா முட்டையும் நிஜப் பெயரை சொல்லாமல் இருப்பது, பாட்டி வீட்டிலேயே பிட்சா செய்து கொடுப்பது, “அண்ணா ஒரு தடவை திறந்து காட்டுங்க” என்று பிட்சாவை பார்க்கத் துடிப்பது, நாயை விற்பது, புதுத்துணிகள் வாங்க போடும் திட்டம் என ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைத்தாலும், ஆழ்மனதையும் கொஞ்சம் தொட்டுவிடுகிறது.

kakkamuttai_2066920f

பணக்காரர்களுக்கு சர்வ சாதாரணமாகிவிட்ட இந்த பிட்சா, ஏழைகளுக்கு வாழ்வின் கனவாக இந்த உலகின் ஏற்றத்தாழ்வுகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது.

பிட்சா கடையைத் திறந்து வைக்க வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் நடிகர் சிம்பு.

சிறுவர்கள் பிட்சா கடையில் அடிவாங்குவது போலான அந்த காணொளி பயன்படுத்தப்படும் விதம், காவல்துறை, அரசியல்வாதிகள் என இரண்டாம் பாதியில் கதை முற்றிலும் வேறு ஒரு பாதையில் பயணித்தாலும், யாரும் எதிர்பார்க்காத முடிவை வைத்து இயக்குநர் தேசிய விருதை அள்ளிச் சென்று விட்டார்.

ஒளிப்பதிவு, இசை

மணிகண்டனே ஒளிப்பதிவும் செய்துள்ள இந்த படத்தில் சென்னையைச் சுற்றிய புறநகர் பகுதிகள் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.

ஜிவி பிரகாஷின் பின்னணி இசை காட்சிகளுக்கு அழகாகப் பொருந்தி உள்ளது. சில காட்சிகளில் நிலவும் மௌனமும் ரசிக்க வைக்கின்றது.

மொத்தத்தில், எளிமையான கதையில் ஆழமான கருத்தைப் பதிவு செய்திருக்கும் அற்புதமான படம் ‘காக்கா முட்டை’.

– ஃபீனிக்ஸ்தாசன்