கோத்தகினபாலு, ஜூன் 7 – நேற்றுடன் முடிவடைந்த பாஸ் கட்சியின் மாநாட்டில் ஜசெகவுடன் உறவுகளை முறித்துக் கொள்கின்றோம் எனப் பாஸ் உலாமாக்கள் மன்றம் முடிவெடுத்து அதனைப் பாஸ் பொதுப் பேரவையும் எந்தவித விவாதமும் இன்றி ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில் பாஸ் தலைவர் ஹாடி அவாங், ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இருவரும் இக்கட்டான, சங்கடமான சூழ்நிலையில் சந்தித்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது.
இருவரும் சபா மாநிலத்தின் குண்டாசாங் பகுதியில் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.
அண்மையில் பாஸ் மாநாட்டின் இறுதியில் உரையாற்றிய ஹாடி அவாங், ஜசெகவையும், பிகேஆரையும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து இந்த எதிர்பாராத, சங்கடமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
கினபாலு பூங்காவில் இருந்து லிம் கிட் சியாங் புறப்பட இருந்த தருணத்தில் அங்கு தனது குழுவினருடன் வந்து சேர்ந்தார் ஹாடி அவாங். அவரைக் கண்டதும் கிட் சியாங் அருகில் செல்ல, இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
“எனினும் இருவரும் ஒரு வார்த்தை கூடப் பேசிக் கொள்ளவில்லை,” என்று இந்தச் சந்திப்பை நேரில் கண்ட ஜசெக அரசியல் கல்வி இயக்குநர் ஜிஞ்சர் பூங் தெரிவித்தார்.
இதன் பின்னர் இருவரும் தங்கள் வழியில் சென்றுள்ளனர். ஹாடி அவாங் கினபாலு பூங்காவில் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
“இது உளப்பூர்வமான சந்திப்புதான் என்றாலும் அண்மைய அரசியல் சம்பவங்களின் காரணமாக இருவருக்கும் சங்கடமாக அமைந்துவிட்டது,” என்று பூக் மேலும் தெரிவித்தார்.