கோத்தகினபாலு, ஜூன் 7 – கினபாலு மலைச்சிகரத்தின் ஆன்மா (ஆவி) கோபத்தில் இருப்பதாகப் ‘பபோலியன்’ என்று குறிப்பிடப்படும் சபா பழங்குடியினப் பூசாரிகளின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அக்கோபத்தைத் தணிக்க அண்மையில் அம்மலைச் சிகரத்தில் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், சிறுநீரும் கழித்து அநாகரிகமாக நடந்துகொண்ட 10 வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் 10 எருமைத் தலைகளைத் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதுவே உள்ளூர் வழக்கம் என்று குறிப்பிட்டுள்ள பபோலியன் டின்டாரமா அமான் சிரோம் சிம்புனா, சுற்றுலாப் பயணிகளின் செய்கை மலையைப் பாதுகாக்கும் சக்திக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இதன் காரணமாகவே வெள்ளிக்கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
“உள்ளூர் நம்பிக்கையின்படி மலையைக் காக்கும் சக்தி (ஆன்மா) மிகுந்த கோபத்தில் உள்ளது. ஆனால் இக்கோபத்திற்கு அப்பாவி மக்களே பலியாகியுள்ளனர். அவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளின் அநாகரிகச் செயலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. மலையைக் காக்கும் சக்திக்குச் சுற்றுலாப் பயணிகள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளனர். தங்கள் தவறுக்கு அவர்கள் அபராதம் செலுத்த வேண்டும். அவர்கள் 10 ஆண் அல்லது பெண் எருமைகளைத் தர வேண்டும்,” என்று டின்டாரமா அமான் கூறினார்.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பபோலியன் சமூகத்தின் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் ஆன்மா சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்லும் முன்னர் கினபாலு மலைச்சிகரத்தில் நிலை கொண்டு ஓய்வெடுக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
இதற்கிடையே மலைச்சிகரத்தைக் காக்கும் ஆன்மாவின் கோபத்தைத் தணிக்கும் விதமாகப் பிரமாண்ட பிரார்த்தனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்று சபா துணை முதல்வர் டான்ஸ்ரீ ஜோசப் பைரின் தெரிவித்துள்ள யோசனையை வரவேற்பதாக டின்டாரமா அமான் மேலும் கூறியுள்ளார்.