புது டெல்லி, ஜூன் 8 – கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்குச் சொந்தமான 33 சேனல்கள் ஒளிபரப்பப்படுவதற்கான ‘பாதுகாப்பு அனுமதியை’ (Security Clearance) அளிக்க இந்திய உள்துறை அமைச்சகம், செய்தி மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்குத் தடை விதித்துள்ளது. இதன் காரணமாகச் சன் குழுமத்தின் ஒட்டுமொத்த சேனல்களுக்கும் ஒளிபரப்பு உரிமம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் ஆகியோர் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கில், தயாநிதி மாறன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தொலைபேசி இணைப்பை சட்டவிரோதமாக வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நிலுவையில் இருந்த இந்த வழக்கின் பிடி தற்போது இறுகி வருகிறது.
இந்த வழக்குகளால் சன் குழுமத்திற்குச் சொந்தமான 742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடக்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாகச் சன் குழுமத்திற்குச் சொந்தமான 40 ‘எஃப்.எம்’ (FM) வானொலி ஒலிபரப்புச் சேவைக்கான பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் வழங்க மறுத்தது.
இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி தலையிட்டும் உள்துறை அமைச்சகம் சமரசத்திற்கு உட்படவில்லை. தற்போது தனது அடுத்த கட்ட நடவடிக்கையாகத் தொலைக்காட்சி சேனல்களுக்கான ஒளிபரப்பு உரிமத்தைத் தடை செய்யும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் இதன் உரிமத்தைப் புதுப்பிக்க மத்திய அரசிடம், சன் குழுமம் விண்ணப்பித்திருந்தது. 10 ஆண்டு காலத்திற்குரிய இந்த உரிமத்தை வழங்கத் தான் மத்திய அரசு தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சகத்தின் இந்தப் பிடி இறுகும் பட்சத்தில் 33 சேனல்களின் ஒளிபரப்பு உரிமம் ரத்தாகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தொலைக்காட்சி உரிமமும் ரத்தானால் அது மாறன் சகோதரர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.