ராமேஸ்வரம், ஜூன் 8- ஒவ்வொரு வீடும் நன்றாக இருந்தால் அந்த ஊரே நன்றாக இருக்கும்; ஒவ்வொரு ஊரும் நன்றாக இருந்தால் அந்த மாநிலமே நன்றாக இருக்கும்; ஒவ்வொரு மாநிலமும் நன்றாக இருந்தால் அந்த நாடே நன்றாக இருக்கும்.
அந்த வகையில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்கிறது ஒரு கடற்கரைக் கிராமம்.ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கிறது புதுமடம் என்னும் கடற்கரைக் கிராமம்.
பெயருக்குத் தான் கிராமமே தவிர, தன்னிறைவில் நகரங்களைச் சவாலுக்கு அழைக்கிறது இவ்வூர். இவ்வூரைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளிலும் சென்னை போன்ற பெரு நகரங்களிலும் தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள்.
தங்களது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஊர்ப் பொதுநலனுக்காகச் செலவிட்டு வருகிறார்கள்.அதனாலேயே தன்னிறைவு பெற்ற ஊராகத் திகழ்கிறது.
இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்த எழுத்தாளர் ஜாபர் அலி கூறுவதாவது:
எங்களூரில் 75 சதவீதம் முஸ்லீம்கள் இருந்தாலும் இங்கு எந்தவிதமான சாதி மத வேற்றுமைக்கு இடமேயில்லை.
ஆண்டுதோறும் ரம்ஜான் பெருநாள் முடிந்ததும் ஊர்க் கூட்டம் போடுவோம். அப்போது ஊருக்குச் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் குறித்து விவாதிப்போம். அதில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்துப் பணிகளைத் தொடங்கிவிடுவோம்.
ஊராட்சியிலிருந்து சரிவரக் குப்பைகளை அள்ளுவதில்லை என்பது குறையாக இருந்தது. அதைப் போக்குவதற்காகப் ‘பைத்துல்மால்'(ஏழைகளுக்கு உதவுதல்) என்ற அமைப்பை உருவாக்கினோம். அதற்காக 10 பேர் சேர்ந்து டிராக்டர் வாங்கிக் கொடுத்தார்கள்.
துப்புரவுப் பணியாளர்கள் இரண்டு பேரைத் தலா 5000 சம்பளத்திற்கு நாங்களே நியமித்தோம். 8000 சம்பளத்தில் டிராக்டருக்கு ஓட்டுனர் போட்டு குப்பைகளை அள்ள ஆரம்பித்தோம்.
எங்கள் ஊரைச் சேர்ந்த யாருக்கேனும் விபத்து ஏற்பட்டாலோ, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ அதைப்பற்றிய விவரத்தை எங்கள் ஊர் இளைஞர்கள் முகநூலில் போட்டு விடுவார்கள் .அதற்கடுத்த ஓரிரு நாளில் அதற்கான பணத்தை வெளி நாட்டில் இருக்கும் எங்கள் ஊர்க்காரர்கள் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
எங்கள் ஊர்ப் பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து 25 லட்ச ரூபாயில் கட்டிடம் கட்டிக் கொடுத்தார்கள்.அதுமட்டுமல்லாமல்,பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு நிதி உதவி அளிக்கிறார்கள்.
பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளிக் கூடம் தேவைப்படுகிறது. அதற்காக இலங்கையில் தொழில் செய்யும் முகம்மது உனேஸ் என்பவர் தமது 5 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுத்துள்ளார்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்குத் தேவையான அனைத்தையும் ஊர்மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் அடுக்கிக் கொண்டே போனார்.
ஆகா, கேட்பதற்கு எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது! இப்படி ஒவ்வொரு ஊரும் இருந்தால் இந்தியா வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகச் சீக்கிரமே முன்னேறிவிடும் என்பதில் ஐயமில்லை.