சென்னை, ஜூன் 9- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோரப் பாதுகாப்பு குறித்து ‘ஆப்ரேசன் ஆம்லா’ ஒத்திகை நிகழ்ச்சி 36 மணி நேரம் நடப்பதாக இருந்தது.
இந்த ஒத்திகைக்காகச் சென்னையிலிருந்து புதுச்சேரிக்குச் சென்ற கடலோரக் காவல் படை விமானத்தைக் காணவில்லை. டோர்னியர் ரகத்தைச் சேரந்த அந்த விமானத்தில் 3 பேர் இருந்தனர். அவர்கள் கதி என்னாயிற்று என்று தெரியவில்லை.
கடலூர் அருகே கடலில் 27 நாட்டிகல் மைல் தூரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.
நேற்று நள்ளிரவு முதல் அந்த விமானத்துடனான ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாகத் திருச்சி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
காணாமல்போன விமானத்தையும் அதில் இருந்தவர்களையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போனதால், இந்த ஒத்திகை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.