சென்னை, ஜூன் 9- நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் அடுத்த மாதம் 15 -ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை.சந்திரசேகர் ஆகியோர் ஓர் அணியில் அதே பதவிக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர்.
சரத்குமார் அணியினருக்கு எதிராக விஷால் தலைமையில் நாசர், ஆர்யா, கார்த்தி, ஜீவா போன்ற முக்கிய நடிகர்கள் ஓரணியாகத் திரண்டு செயல்பட்டு வருகின்றனர்.
அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த நடிகர் சங்கத் தேர்தலில் தனது அணி வெற்றி பெற்றால் தான், அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு அதிக தொகுதிகளைப் பெற முடியும் என்று சரத்குமார் கருதுகிறார்.
எனவே, எப்பாடுபட்டாவது நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற வியூகம் அமைத்து வருகிறார்.
சரத்குமார் அதிமுக-வின் ஆதரவாளராக இருந்து கொண்டு கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்து வருவதால், அவர் மீது கருணாநிதிக்கு மிகுந்த அதிருப்தி. அதனால், நடிகர் சங்கத் தேர்தலில் அவரைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
அதற்காக அவரும் ஒரு வியூகம் அமைப்பதாகக் கேள்வி.
சரத்குமார் அணியைப் பலவீனப்படுத்த, முதல் கட்டமாக, அந்த அணியில் வீரியமாக இருக்கும் ராதாரவியை திமுக-வுக்கு மீண்டும் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
ராதாரவி திமுக-விற்கு வரும் பட்சத்தில் அவருக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் அவர் விரும்புகின்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
ராதாரவி என்ன முடிவெடுப்பார் என்பதைப் பொருத்தே நடிகர் சங்கத் தேர்தலில் யார் கை ஓங்கும் என்பது தெரிய வரும்.