அமெரிக்கா, மார்ச்.7- ஐநா , ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா கடந்த மாதம் அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்நிலையில், வடகொரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவும் சீனாவும் கூட்டு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளன.
வடகொரியாவின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அந்நாட்டு தூதரக அதிகாரிகளின் செயல்பாடுகளை குறிவைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானம் குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் சூசன் ரைஸ் கூறியதாவது:-
வடகொரியாவின் சட்டவிரோத அணு ஆயுதங்கள் தயாரிப்பு ஏவுகணை திட்டங்களை முடக்கும் வகையில் இந்த தீர்மானத்தில் தடை கோரப்பட்டுள்ளது. மீண்டும் அணு ஆயுத சோதனையை நடத்தாமல் தடுக்க இதில் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வடகொரிய தூதரக அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள், வங்கி உறவுகள், பெரிய அளவில் பணம் கைமாறுதல் உள்ளிட்டவற்றை தடுக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
வடகொரியாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை அடுத்த கட்டத்துக்கு இது எடுத்துச் செல்லும். மேலும் அணு ஆயுத பரவலை தடுக்க சர்வதேச சமுதாயம் எடுத்து வரும் நடவடிக்கைகளின் வலுவை காட்டவும், சர்வதேச ஒப்பந்தங்களை வடகொரியா கடைபிடிக்க செய்யவும் இந்த தீர்மானம் வழிவகுக்கும். இவ்வாறு சூசன் கூறினார்.