மும்பை, ஜூன் 12 – மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது கார்கள் தயாரிப்பை இரு மடங்காக்கி உள்ளது. இதன் மூலம் அந்நிறுவனம் ஆண்டிற்கு 20,000 கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் அந்நிறுவனம் பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘மேக் இன் இந்தியாவில்’ (Make in India) தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு கார்கள் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் இந்தாண்டு மட்டும் 40 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி தான் அந்நிறுவனத்தை உள்ளூர் தயாரிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கச் செய்துள்ளது.
இது தொடர்பாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் தலைமை நிர்வாகி எபர்ஹார்ட் கேர்ன் கூறுகையில், “உலக அளவில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களின் வர்த்தகத்தில், இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் எங்கள் புதிய தயாரிப்பு தளத்தை உருவாக்கி உள்ளோம். இதன் மூலம் இங்கு கூடுதலான கார்களை தயாரிக்க முடியும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “இந்தியாவில் ஆடம்பரக் கார்களின் வர்த்தகம் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் 33,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. 2013-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 32,000 ஆக இருந்தது. இந்த வருடத்தில் இந்த எண்ணிக்கை 40,000 தாண்டும். இந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாங்கள் செயல்பட்டு வருகின்றோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆலை மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள சகான் என்ற இடத்தில் உள்ளது. இந்த ஆலையை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலையில் தற்சமயம் ‘ஜிஎல்ஏ’ (GLA) ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்கான வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. விற்பனைக் கூடங்களில் இதன் தற்போதைய விலை 32.75 முதல் 36.9 லட்சம் ரூபாயாகும். சகான் ஆலையில் இந்த கார்கள் தயாரிக்கப்படுவதால் விரைவில் இந்த விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.