கோலாலம்பூர், ஜூன் 16 – மலேசியாவின் கோத்த பாரு நகரில் நடந்த காற்பந்தாட்ட போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த நைஜீரியாவைச் சேர்ந்த வீரர் டேவிட் ஒனியா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
நைஜீரியாவைச் சேர்ந்தவர் டேவிட் ஒனியா(30). அவர் அண்மையில் தான் மலேசிய கிளப்பில் சேர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை மலேசியாவில் உள்ள கோத்த பாரு நகரில் டி-குழு மற்றும் கெலந்தான் அணிக்கும் இடையே நட்பு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் டி-குழு சார்பில் டேவிட் ஒனியா கலந்து கொண்டு விளையாடினார். போட்டி துவங்கிய 3-வது நிமிடத்தில் ஒனியா மைதானத்தில் மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் 30 நிமிடங்கள் போராடியும் ஒனியாவை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி அறிந்ததும் காற்பந்து போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில் இது குறித்து மலேசிய காற்பந்துக் குழுத் தலைவர் முகமது ஜெயின் கூறுகையில்,
“ஒனியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்சிஜன் கிடைக்காமல் பல நிமிடங்கள் போராடினார். இது நட்புக்கான போட்டி தான். அதனால் யாரும் வேகமாகக் கூட ஓட வேண்டியது இல்லை. ஒனியா மறைவு மிகவும் வருத்தமளிப்பதாகவும்” அவர் கூறினார்.