வாஷிங்டன், ஜூன் 18 – இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல், கவலை அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மியான்மரில் இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகள் 100 பேரைச் சுட்டுக் கொன்றது.
அதேபோன்ற ஒரு தாக்குதல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்தப்படலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. இதைக் கண்டித்து, பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் பேசினர். அதைத் தொடர்ந்து, எல்லையில் அந்நாட்டு ராணுவம் அத்துமீறியதால், பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், ரம்ஜான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபைப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பு கொண்டு பேசினார். நவாஸிடம் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, நல்லெண்ண நடவடிக்கையாக, இந்தியச் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் மீனவர்களை விடுதலை செய்வதாக உறுதி அளித்தார்.
இந்த நிகழ்வுக்குப் பின்னர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, நவாஸ் ஷெரீபைத் தொடர்பு கொண்டு பேசினார். இது குறித்து கெர்ரி நேற்று கூறியதாவது; “சமீப காலமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டு, பதற்றம் அதிகரித்து வருகிறது”.
“இது சம்பந்தமாக, நவாஸ் ஷெரீபிடம் பேசினேன். இது அமெரிக்காவுக்குப் பெரும் கவலை அளிக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிக முக்கியமான நாடுகள். நான் பேசியதற்கு முன்பாக, பாகிஸ்தான் பிரதமரிடம் இந்திய பிரதமர் பேசியுள்ளார்”.
“இந்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது. இதுபோன்று, பதற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் நாங்கள் மேற்கொள்வோம்” என ஜான் கெர்ரி தெரிவித்தார்.