கலாபுராகி, ஜூன்18- நாடு முழுவதிலும் இருந்து திரும்பப் பெறப்படும் மேகி நூடுல்ஸை நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு சென்று சிமெண்டு உலைகளில் போட்டு எரித்து அழிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் கடைகளில் இருந்து இந்த நூடுல்ஸ் பாக்கெட்டுகளைச் சேகரித்து, 38 கிடங்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் பணிகளில் சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள்( lorry) ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி 27 ஆயிரத்து 240 டன் மேகி நூடுல்ஸைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இவ்வாறு திரும்பப் பெறப்பட்டு வரும் மேகி நூடுல்ஸை, சிமெண்டுக்கான மூலப்பொருட்களை உருவாக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 சிமெண்டு நிறுவனங்களுடன் நெஸ்லே நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதில் கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்துக்கு உட்பட்ட வாடியில் உள்ள சிமெண்டு உலை ஒன்றும் அடங்கும்.
இந்த உலைக்கு மும்பை மற்றும் ஆமதாபாத் நகரங்களில் இருந்து சுமார் 150 கனரக வாகனங்களில் மேகி நூடுல்ஸ் உறைகள் நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டன. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேகி நூடுல்ஸ் உறைகள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.