பெங்களூரு, ஜூன் 20- வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து, கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 11–ந் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாரும், தமிழக எதிர்க்கட்சிகளும் கோரி வந்தன.
இந்நிலையில், கர்நாடகா மாநில மந்திரி சபை முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் கூடி ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராக ஆச்சாரியாவையும், அவருக்கு உதவியாக வழக்கறிஞர் சந்தேஷ் சவுடாவையும் நியமித்துக் கர்நாடக அரசு, அரசாணை பிறப்பித்தத்து.
தற்போது அந்த மேல் முறையீட்டு மனு டெல்லி கொண்டு செல்லப்பட்டு சட்ட நிபுணர்களால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் திங்கட்கிழமை (22- தேதி) கர்நாடகா அரசு தரப்பில் அந்த மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
கோடைக் கால விடுமுறை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு, தாக்கல் செய்யப்படுவதால் ஜூலை முதல் வாரம் இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.