புதுடெல்லி, ஜூன்23- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இந்தப் போராட்டத்தில் மத்திய, மாநில மற்றும் டெல்லி மாநகராட்சியைச் சேர்ந்த 20 அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் புறநோயாளிகள் மற்றும் படுக்கைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் கோரிக்கைகளாவது:
உயிர் காக்கும் மருந்துகளைப் போதிய அளவு வழங்க வேண்டும்.
பணியின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தங்களுக்குக் குறிப்பிட்ட பணி நேரத்தை அறிவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதியில் ஊதியம் வழங்க வேண்டும்.
“மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பிரதமர் மற்றும் மத்தியச் சுகாதாரத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதினோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. எனவே காலவரையற்ற போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.