சென்னை, ஜூன் 23 – விஜய்யும் அஜித்தும் தங்களது படங்களில் ஒருவருக்கொருவர் சவால்விடுவதை நிறுத்தி, நண்பர்களாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
ஆனால், அவர்களது இரசிகர்களின் சண்டை ஓயவில்லை. விஜய்க்குப் பிறந்த நாள் என்றால் அவரது இரசிகர்கள் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே! இதில் அஜித்தின் இரசிகர்களுக்கு என்ன வந்தது?
விஜய்யின் பிறந்தநாள் நெகிழித்திரைக்கு( flexக்கு) அருகிலேயே, “தலயின் ராஜ்ஜியத்தில் தளபதி எல்லாம் சும்மா” என்று போட்டி நெகிழித்திரை வைக்கிறார்கள். இது தேவையா?
சமூக வலைதளம் பூராவும் இவர்களின் வெறுப்புக் கழிவுகள்தான் ஏராளம்.
இத்தகைய வம்புச் சண்டை, வம்புக்குப் பெயர்போன சிம்புவையே வருத்தப்பட வைத்துள்ளது.
“விஜய் அல்லது அஜீத் அவர்களின் உண்மையான ரசிகன் இத்தகைய காரியங்களைச் செய்ய மாட்டான். இதுபோன்ற நடவடிக்கைகள் உங்களது அபிமான நடிகர்களுக்கே பாதகமாக முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். தல அஜீத்தின் ரசிகனாகிய நான், உங்களிடம், அஜீத் ரசிகர்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன்” எனச் சிம்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
சிம்புவைப் போலவே நடிகர் விவேக்கும், “அஜீத், விஜய் இருவருமே நண்பர்கள். ஆனால் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது வருந்தத்தக்கது. வாழ்த்துவோம் வளருவோம்” என்று இந்தச் சண்டையைப் பார்த்து அறிவுரை வழங்கியிருக்கிறார்.
இரகசிகர்களே! மனப் பக்குவம் இன்றி இப்படி வீண் சண்டையிடுவது அநாகரிகம் என்பதை உணருங்கள்! உங்களுக்குப் பிடித்தமானரை இரசியுங்கள்; அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதை விடுத்து அடுத்தவரைத் தூற்றுவதற்கு உங்களுக்கு உரிமையில்லை.