ரியாத், ஜூன் 24 – புலனாய்வுப் பத்திரிக்கையான விக்கிலீக்ஸ், சவுதி அரேபியா அரசின் ஊழல்களையும், ரகசியங்களையும் சுமார் 60,000 ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தி உள்ளது. இணையத்தில் வெளியான அந்த ஆவணங்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. விக்கிலீக்ஸின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்துள்ள சவுதி அரசு, தங்கள் நாட்டில் அந்த ஆவணங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்வதற்குத் தடை விதித்துள்ளது. மீறிப் பகிர்ந்தால் 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
கடந்த 19-ம் தேதி விக்கிலீக்ஸ், ‘தி சவுதி கேபிள்ஸ்’ (The Saudi Cables) என்ற பெயரில் தனது தளத்தில், சவுதி அரேபியாவின் உள்நாட்டு நடவடிக்கைகள், மன்னர் குடும்பத்தினரின் அதிகார அத்துமீறல்கள், சர்வாதிகாரப் போக்கு, எகிப்தின் முன்னாள் அதிபர் முகமட் மோர்சியை விடுவிக்க 10 பில்லியன் டாலர்கள் கொடுக்க முயன்றது என அந்நாட்டின் அனைத்து ரகசியங்களையும் அம்பலப்படுத்தியது.
இது தொடர்பாக விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே கூறுகையில், “சவுதி அரசு ஜனநாயகத்தை ஒழுங்கற்றதாக்கி, இரகசியச் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. அதன் எதிரொலி தான், இந்த வருடத்தில் மட்டும் நூறு பேர் தலை வெட்டப்பட்டுத் தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் போக்கையும் தொடங்கி உள்ளது” என்று கூறியுள்ளார்.
விக்கிலீக்ஸின் இந்த அதிரடியால் அதிர்ச்சி அடைந்துள்ள சவுதி அரசு, இந்த ஆவணங்களை நம்ப வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களிடம் தெரிவித்துள்ளது. மேலும், அந்த ஆவணங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.