சென்னை, ஜூன் 24 – ‘மெல்லிசை மன்னர்’ என்று அழைக்கப்படும் எம்.எஸ்.விஸ்வநாதன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று 87-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்து, வாழும் சாதனையாளராகத் திகழ்ந்து வரும் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், கடந்த சில வருடங்களாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று, அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரது உறவினர்கள் கூறியுள்ளதாவது:-
“எம்.எஸ்.விஸ்வநாதன் முதுமையின் காரணமாகக் கடுமையான மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறார். ஏற்கனவே நீரழிவு நோய் இருப்பதால், அவர் சற்றே சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதால் அவர், இரண்டொரு நாட்களில் குணமடைந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளன.