Home நாடு ஒரே நாளில் 4 நில அதிர்வுகள்: பீதியில் சபா மக்கள்!

ஒரே நாளில் 4 நில அதிர்வுகள்: பீதியில் சபா மக்கள்!

706
0
SHARE
Ad

Sabah_mapகோத்தா கினபாலு, ஜூன் 25 – ஒரே நாளில் 4 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டதன் காரணமாகச் சபா மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நில அதிர்வுகளின் தாக்கத்தால் சில இடங்களில் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் இருந்த ஊழியர்கள் அவசரமாக வெளியேறினர்.

நேற்று மாலை 5.33 மணியளவில் ரிக்டர் அளவுகோளில் 4.3 புள்ளிகள் அளவில் நில அதிர்வு பதிவானது.

ஜூன் 5-ஆம் தேதியன்று 5.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பின்னர் இப்பகுதியில் இதுவரை 90 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் கினபாலு மலைச்சிகரப் பகுதியில் உண்டான நிலநடுக்கத்தையடுத்துச் சபாவில் மேலும் பல நில அதிர்வுகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ரனாவ் பகுதியில் நேற்று காலை 10.54 மணிக்கு 2.6 ரிக்டர் புள்ளிகள் அளவில் முதல் நில அதிர்வு ஏற்பட்டது. இதில் சில பள்ளிகளில் மேற்கூரைகள் சரிந்தன.

5.33 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு மிக வலுவானதாக இருந்தது. இதை குண்டசாங், ரனாவ், கோத்தபெலுட் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே உணர முடிந்தது.

இதையடுத்து 6.26 மற்றும் 6.39 மணிக்கு மேலும் இருமுறை 2.6, 3 ரிக்டர் புள்ளிகள் அளவில் நில அதிர்வுகள் ஏற்பட்டன.

“இதுபோன்று மேலும் பல நில அதிர்வுகளை எதிர்பார்க்கலாம். மிதமான நில நடுக்கங்களை உணரும்போது, எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மக்கள் கற்றுப் பழக வேண்டும்” என்கிறார் புவி ஆய்வாளரான பேராசிரியர் ஃபெலிக்ஸ் தோங்குல்.

நேற்று மாலை 5.33 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வின்போது பல கட்டிடங்கள் ஆட்டம் கண்டுள்ளன. அவற்றில் இருந்தவர்கள் தங்கள் கால்களுக்கு கீழே தரை நழுவிச் சென்றதைப் போல் உணர்ந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

கோத்தா கினபாலுவில் உள்ள கேகே டைம்ஸ் ஸ்கொயர், இமாகோ மால் உள்ளிட்ட கட்டிடங்களில் இருந்தவர்கள் இந்த அதிர்வை முழுமையாக உணர்ந்துள்ளனர். இதையடுத்துக் கட்டிடங்களை விட்டு பலர் உடனடியாக வெளியேறினர்.

ரனவ் பகுதியில் கிட்டத்தட்ட தினமும் நில அதிர்வு ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

“சபாவில் இந்தளவு நில அதிர்வுகளை உணர்ந்ததே இல்லை. நில நடுக்கத்துக்குப் பின்னர் இவ்வளவு நில அதிர்வுகள் ஏற்பட என்ன காரணம்? சபாவுக்கு என்ன நேர்கிறது?” என்று அச்சத்துடன் கேள்வி எழுப்புகிறார் பெனாம்பங்கைச் சேர்ந்த இல்லத்தரசியான 55 வயது ஷீலா பிஜோ.