Home அவசியம் படிக்க வேண்டியவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய போபி ஜிண்டால் யார்?

அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய போபி ஜிண்டால் யார்?

467
0
SHARE
Ad

bobby-jindalநியூ யார்க், ஜூன் 25 – அமெரிக்க-இந்தியர்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஓங்கி ஒலித்திருக்கும் போபி ஜிண்டாலின், அதிபர் வேட்பாளருக்கான அறிவிப்பு, அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க-இந்தியராகவும், லூயிசியானா ஆளுநராகவும் மட்டுமே அறியப்பட்டு வந்த ஜிண்டால், அமெரிக்க அதிபர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டது முதல் உலகெங்கும் பல்வேறு வாதங்களும், விமர்சனங்களும் பெரிய அளவில் எழுந்துள்ளன. இந்த அளவிற்கு ஒரு அதிபர் வேட்பாளருக்கான அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுவே முதல் முறை என அமெரிக்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பேச்சாக உள்ளது.

அதற்கு மிக முக்கியக் காரணம், போபி ஜிண்டால் பிறப்பால் அமெரிக்கராக இருந்தாலும், வம்சாவளி ரீதியாக இந்தியர் என்பதால் தான். இந்தியாவின் பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த அவரின் குடும்பம், ஜிண்டால் பிறப்பதற்கு ஆறு மாதம் முன்பே அமெரிக்காவில் குடியேறியது. லூயிசியானாவின் பாடன் ரூஜ் நகரத்தில் ஜூன் 10, 1971-ம் ஆண்டு பிறந்த போபி ஜிண்டால், பின்னாளில் அம்மாகாணத்தின் ஆளுநராக மாறுவார் என்றும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அப்போது யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

#TamilSchoolmychoice

பள்ளி, கல்லூரி நாட்களிலே சமூகப் பொறுப்புகளிலும், அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டிய ஜிண்டால், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் குறித்த பட்டப்படிப்பை முடித்த பிறகு, இவரின் அரசியல் ஆர்வம், 2001-ம் ஆண்டு அமெரிக்க முன்னாள் பிரதமர் ஜார்ஜ் புஷ்ஷிடம் கொண்டு சேர்த்தது. ஜிண்டாலின் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்ட புஷ், இவரைச் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறையில் முக்கிய அதிகாரியாக நியமித்தார். அதுமுதல் தன்னைக் குடியரசுக் கட்சியில் இணைத்துக் கொண்ட ஜிண்டால், பின்னாளில் இள வயது லூசியானா ஆளுநராகவும், இன்று அமெரிக்க அதிபர் வேட்பாளராகவும் முன்னேறும் அளவிற்குத் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

ஜிண்டாலின் அதிபர் கனவு நிறைவேற அவர் முதலில் குடியரசுக் கட்சியின் பலம் பொருந்திய வேட்பாளரான ஜெப் புஷ்ஷை வீழ்த்த வேண்டும். ஒருவேளை அவர் ஜெப் புஷ்ஷை வீழ்த்தி குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அதிபர் தேர்தலில் பெரும் முதிர்ச்சி பெற்ற ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தித் தான் அமெரிக்க அதிபராக வேண்டும். இவை அனைத்தும் சாத்தியமா என்பது குறித்த கேள்விகள் தற்போது எழவில்லை.

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு, இன ரீதியிலான பாகுபாடுகளைத் தாண்டி ஜிண்டால் எடுத்து வைத்துள்ள இந்த அரசியல் பாதை இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் அவரை அதிபர் அரியணையில் அமரவைக்கும் என்றே அமெரிக்க ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.