சென்னை, ஜூன் 27 – ஆர்.கே.நகர் தொகுதியில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் திமுக நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு 788 பேருக்கு உதவிகளை வழங்கினார் தயாநிதி மாறன். பின்னர் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில்:-
“அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது அதிகம் பாதிக்கப்பட கட்சி திமுக தான். பல சோதனைகளைக் கடந்து வெற்றி பெற்றவர் திமுக தலைவர் கருணாநிதி. 93-வது வயதில் மீண்டும் திமுக தலைவரே தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்”.
“ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. சென்ற பொதுத்தேர்தலில் தேர்தல் ஆணையம், தேர்தல் ஆணையம் போலவா நடந்து கொண்டது. பணம் பட்டுவாடா செய்தார்கள்”.
“அதை எதிர்த்து நாம் கேள்வி எழுப்பினோம். ஊரடங்குச் சட்டம் தமிழகத்தில் மட்டும் பிறப்பிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு ஒரு பொய்யான வெற்றியைத் தந்திருக்கிறது. இப்போதும் அதுவே நடந்து வருகிறது” என்றார் தயாநிதி மாறன்.