பெலுரான், ஜூலை 1 – சுங்கை பெய்தானில் உள்ள கம்போங் கபுலுவில் முதலையால் தாக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர், அவரது கால்கள் மாயமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ரம்சா லாவ் என்ற 57 வயதான அந்த ஆடவரின் சடலம் அவர் காணாமல் போனதாகக் கருதப்படும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரத்தில் ஆற்றில் மிதந்த நிலையில் காணப்பட்டதாகப் பெலுரான் காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் சிவநாதன் வேலாயுதம் தெரிவித்தார்.
இதையடுத்து அச்சடலம் பிரேதப் பரிசோதனைக்காகப் பிடாஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.
“கடந்த திங்கட்கிழமை காலை 9 மணியளவில் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் புல் வெட்டுவதற்காகத் தனது தந்தை வெளியே சென்றார் என்று ரம்சாவின் மகள் தெரிவித்துள்ளார். எனினும் மாலை 3 மணியாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்துத் தனது தந்தையைத் தேட கிராமத்தினரின் உதவியை அவரது மகள் நாடியுள்ளார். ஆனால் அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் ரம்சா அணிந்திருந்த ஒரு ஜோடி காலணிகளை மட்டுமே அவர்களால் கண்டெடுக்க முடிந்தது,” என்று சிவநாதன் வேலாயுதம் மேலும் தெரிவித்தார்.
இதையடுத்து அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மாலை 5.35 மணியளவில் முதலையால் கடிக்கப்பட்டதைப் போல் காட்சியளிக்கும் உருவம் ஒன்றைக் கண்டதாகக் காவல்துறையிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பேரில் தேடுதல் நடவடிக்கையைக் காவல்துறையினர் தொடங்கும் முன்பே ரம்சாவின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சிவநாதன் குறிப்பிட்டார்.
முதலைத் தாக்குதலையடுத்து கிராம மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.