மேடான், ஜூலை 1 – இந்தோனேசிய இராணுவ விமானம், சுமத்ரா தீவில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 122 பேர் பலியானதாக இந்தோனேசிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்நாட்டு விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹெர்குலஸ்-130 விமானம், விடுதிகள் மற்றும் குடியிருப்பு நிறைந்த பகுதியில் விழுந்த இந்தச் சம்பவத்தில், விமானத்தில் பயணம் செய்த 12 பேர் உட்பட 122 பேர் பலியாகி உள்ளனர். இடிபாடுகளுக்கு அடியிலும் சடலங்கள் இருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்” என்று தெரிவித்துள்ளது.
விமானம், குடியிருப்புகள் மீது மோதி உணவகம் ஒன்றின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. எதிர்பாராமல் நடந்த இந்தச் சம்பவத்தில், உணவகத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், அந்தக் குடியிருப்பு வாசிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே விமானம் ஏன் விபத்திற்குள்ளானது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவல்களையும் விமானப்படை அளிக்கவில்லை.
எனினும், விமானம் புறப்படும் சமயத்தில் அதனைக் கண்காணித்தவர்கள், விமானம் புறப்படுவதற்கு ஆயத்தமாகி மேல் எழும்புவதற்கு முன்னர் ஓடுபாதையில் குறைந்த தூரமே ஓடியதாகத் தகவல் தெரிவிக்கின்றனர். அதன் காரணமாகவே, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது.