ஜகார்த்தா, ஜூன் 30 – இந்தோனேசிய இராணுவ விமானம், சுமத்ரா தீவில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக இந்தோனேசிய மீட்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஹிசார் டுர்னிப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தச் சம்வபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயத்தில், விமானத்தில் பயணம் செய்த 13 நபர்கள் யார் யார், அவர்களின் நிலை என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை.
இன்று மதியம் 12 மணியளவில் மேடானில் இருந்து மிகவும் குறுகிய தீவான நாதுனாவிற்குப் புறப்பட்ட சி-130 ஹெர்குலஸ் விமானம், 5 கிலோமீட்டர் தூரம் சென்ற சில நிமிடங்களில் சுமத்ரா தீவின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்து நொறுங்கியது.
விமான விபத்து நடைபெற்றதற்குச் சரியான காரணம் இன்னும் தெளிவாக அறிவிக்கப்படாத நிலையில், வானிலை காரணமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக இந்தோனேசிய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.